08610342347
அஷ்டாங்க யோகா
அஷ்டாங்க யோகா என்பது நாம் யோகநிலைய அடைவதற்கான எட்டு படி நிலைகள் ஆகும். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி. யமம் மற்றும் நியமம் என்பது வாழ்வில் நாம் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதை அறிந்து அதன்படி நடத்தல். ஆசனம் என்பது நம் உடல் இருக்கும் நிலை, நம் உடல் நின்றோ அல்லது அமர்ந்தோ இப்படி எந்த நிலையில் இருந்தாலும் சரி, இதற்கு ஆசனம் என்று பொருள், நம் மனதிற்கும் உடலின் இருப்பு நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நம்முள் ஆனந்தமான நிலைக்கு எடுத்துச் செல்ல உடலை ஒரு குறிப்பிட்டவிதமாக வைப்பது யோகாசனம் என்று பொருள். பிராணாயாமம் என்பது நம் சுவாசத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவது, சுவாசத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதால் மனமும் நம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முடியும். ப்ரத்யாகாரம் என்பது நம் உள்நிலையில் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வளர்ந்து அதே நிலையில் நிலைத்து இருப்பது. தாரணை என்பது நாம் எதை காண்கிறோமோ அதோடு ஐக்யமாவது. இந்த நிலையில் நம்முள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம் ஏற்படுகிறது. தியானம் என்பது நம்முள் நான் என்கிற தன்மை இல்லாமல் அனைத்தும் நாமாக மாறும் உன்னத நிலை. சமாதி என்பது நம் வாழ்வில் சில சமயங்களில் நாம் அனைவரும் அந்த நிலையை உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது நான் என்ற நிலையை கடந்து ஏதோ ஒரு செயலில் நாம் ஈடுபட்டிருப்போம், அது செய்த பிறகு இதை நானா செய்தேன் என்ற சந்தேகம் நம்முள் எழும், இந்த நிலை அவ்வபோது மட்டும் இல்லாமல் எப்பொழுதும் அந்த நிலையில் லயித்து இருப்பது. இந்த நிலையில் நம்முள் பேரானந்த பரவச அனுபவம் உணரமுடிகிறது.